சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்களால் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.₹498 கோடி மதிப்பில் காமாக்யா கோவில் நடைபாதை, ₹358 கோடி செலவில் கவுகாத்தி புதிய விமான நிலைய முனையத்திலிருந்து ஆறு வழிச்சாலை, ₹498 கோடி மதிப்பில் நேரு ஸ்டேடியம் மேம்படுத்துதல், ரூ.300 செலவில் சந்திராபூரில் புதிய விளையாட்டு வளாகம் உள்ளிட்ட சுமார் 11000 கோடி ரூபாய் திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய அவர்,இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் மூலம், அசாம், வடகிழக்கு மாநிலங்கள் மூலம் தெற்கு ஆசிய நாடுகளுடனான இணைப்பு பலம் பெறும். சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்றார்.
நமது புனித யாத்திரைகள், கோயில்கள், நமது நம்பிக்கைக்குரிய இடங்கள் இவை வெறும் தரிசிக்க வேண்டிய இடங்கள் அல்ல. இவை நமது நாகரிகத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டு கால பயணத்தின் அழியாத அடையாளங்கள் என அவர் தெரிவித்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்கள் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும்,அரசியல் லாபங்களுக்காக சொந்த கலாசாரம் மற்றும் வரலாற்றை அவமானப்படுத்தியதாக தெரிவித்தார். எந்தவொரு நாடும் அதன் வரலாற்றைப் புறக்கணிப்பதன் மூலம் முன்னேற முடியாது என்றார்.
கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் அமைதி திரும்பியுள்ளதாகவும், 7,000க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தேசிய நீரோட்டத்திற்கு திரும்பியுள்ளனர் என்றும் அவர் கூறினார். கடந்த தசாப்தத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை தந்துள்ளதகாவும் பிரதமர் குறிப்பிட்டார்.