மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசா சம்பல்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது,கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைவரின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு எல்இடி பல்புகளின் பயன்பாட்டில் புதிய புரட்சியைக் கொண்டு வந்துள்ளதாகவும், இதன் விளைவாக மின் கட்டணச் செலவு குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் இருள் சூழ்ந்துள்ளது. நாட்டின் ஏழைகளின் மின்கட்டணமும் பூஜ்ஜியமாக மாற வேண்டும் என்பதே எங்களின் முயற்சி என்றும், இந்த பட்ஜெட்டில் 1 கோடி குடும்பங்களுக்கு சோலரார் மின் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
முன்னதாக, சம்பல்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம்) நிரந்தர வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.