பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இலங்கை மற்றும் மொரீஷியஸில் இந்தியாவின் UPI பணப்பரிவர்த்தனை சேவைகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று தொடங்கி வைத்தனர். அப்போது UPI சேவை பயன்பாடு தொடங்குவதை நேரில் பார்த்தனர். மொரிஷியஸிலும் ரூபே கார்டு சேவை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள மூன்று நட்பு நாடுகளுக்கு இன்று சிறப்பான நாள். வரலாற்று உறவுகள் நவீன டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டு வருகின்றன என்றார். மக்களின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்கு இது சான்றாகும்.Fintech இணைப்பு மூலம்,எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் மட்டுமின்றி, எல்லை தாண்டிய இணைப்புகளும் பலப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்தியாவின் கூட்டாளிகளை யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் யுபிஐ தற்போது ஒன்றிணைத்துள்ளது என்றும் அவர் கூறினார். UPI சேவைகளால் இலங்கை மற்றும் மொரிஷியஸ் பயனடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு இந்தியாவில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகச்சிறிய கிராமத்தில் உள்ள சிறிய உரிமையாளர்கள் கூட டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துகிறார்கள், ஏனெனில் அதில் வசதியும் வேகமும் உள்ளது.முழு பிராந்தியத்திலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியே நமது இலக்கு என்று மோடி கூறினார். இந்தியா தனது வளர்ச்சியை அண்டை நாடுகளின் நண்பர்களிடம் இருந்து தனித்து பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
கோவிட் தொற்றின் போது COWIN தளத்தின் மூலம், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா நடத்தியது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், வெளிப்படைத் தன்மை அதிகரித்து, ஊழலைக் குறைத்து, பொருளாதாரத்தையும் உள்ளடக்கியதாக மாறி வருகிறது என்றார் பிரதமர். முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உரையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளது. இலங்கையில் உள்ள அருங்காட்சியகங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தென்னிந்திய நாணயங்கள், மற்றும் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் உள்ளன. கிராமங்களில் கூட தென்னிந்திய வர்த்தக நிறுவனங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்ததை இது காட்டுவதாக ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
இன்றைய முயற்சியானது தொழில்நுட்ப ரீதியாக மட்டுமே மேம்படுத்துவதாக அவர் கூறினார். அதிகளவான இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதால், இலங்கையின் ஒவ்வொரு கிராமத்திலும் இது பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். ராமர் கோவில் திறக்கப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் தனது உரையில், இந்தியாவும் மொரிஷியஸும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த வலுவான கலாச்சார, வணிக மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்த உறவில் இன்று இன்னொரு பரிமாணம் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.