சென்னையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாரதப் பிரதமர் மோடியின் சென்னை வருகை பாஜகவுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது. பாஜகவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. புதிய தெம்பை கொடுத்துள்ளது.
பாஜகவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழிருவி மணியன் மற்றும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் எங்களது கூட்டணியில் உள்ளனர். அவர்களுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது.
எந்த எந்தத் தொகுதியில் யார்யார் போட்டியிட உள்ளனர் என்ற விவரம் தற்போது சேகரித்து வருகிறோம். இது குறித்து, தேசிய தலைமயைிடம் தெரிவிக்கப்படும். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கூட்டணி குறித்து நல்ல செய்தி வரும்.
தமிழகத்தில் போதை கலாச்சாரம் பெருகிவிட்டது. இதற்கு காரணம் திமுகதான். திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் ரூ.3,500 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கடத்தியுள்ளார். அவர்களுடன் இணைந்து, விசிக நிர்வாகிகளும் போதை பொருட்கள் கடத்தி வருகின்றனர். இது தமிழகத்திற்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் போலீசார் விழிப்புணர்வுடன் இருந்ததால்தான் இதுபோன்ற போதைப் பொருட்களை கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர் என்றார்