ராமர் குறித்தும், பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி.ஆ.ராசாவிற்கு மத்திய அமைச்சசர் அனுராக் தாக்கூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.பி.ஆ.ராசா. ராமரையும், பாரத மாதாவையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பேசினார். மேலும் தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஆ.ராசாவின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சனாதன தர்மம், இந்து மதம், ராமரை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும் கும்பல்களுடன் அவர்கள் சேர்ந்து செயல்படுகின்றன்ர்.
நாட்டின் மிகப்பெரிய ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் சனாதன தர்மம், ராமருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவரை பாதுகாப்பது யார்? என்ற கேள்வியை காங்கிரசிடம் கேட்க விரும்புகிறேன்? பாகிஸ்தான் ஆதரவு கோஷத்தையும் அக்கட்சி ஏற்கிறதா? பாரதத்தை நாடாக காங்கிரஸ் கருதவில்லையா? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரிவினைவாத அரசியல் செய்வது ஏன்? என அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்.