370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின் ஜம்மு காஷ்மீர் சுதந்திர காற்றை சுவாசிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் ‘விக்சித் பாரத் விக்சித் ஜம்மு காஷ்மீர்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இப்பகுதி அனைத்து சுற்றுலா சாதனைகளையும் முறியடித்து வருகிறது என்றார்.
காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் பல தசாப்தங்களாக ஜம்மு காஷ்மீர் மக்களையும் நாட்டையும் 370 வது பிரிவின் மூலம் தவறாக வழிநடத்தியுள்ளதாகவும், தற்போது மக்களுக்கு உண்மை தெரிய வந்துள்ளது என்றும் கூறினார்.
இன்று ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியின் புதிய உச்சத்தை தொட்டுள்ளது, ஏனெனில் ஜம்மு காஷ்மீர் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு கட்டுப்பாடுகளில் இருந்து இந்த சுதந்திரம் கிடைத்துள்ளது என்றார்.
சட்டப்பிரிவு 370ல் இருந்து ஜம்மு காஷ்மீர் பலன் பெற்றதா அல்லது சில அரசியல் குடும்பங்கள் மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொண்டனவா? என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
ஜம்மு காஷ்மீர் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்ட உண்மை தெரிய வந்துள்ளது. இன்று சட்டப்பிரிவு 370 இல்லை, எனவே இளைஞர்களின் திறமை முழுமையாக மதிக்கப்படுகிறது. அவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. இன்று இங்கு அனைவருக்கும் சம உரிமைகளும் சம வாய்ப்புகளும் உள்ளன என பிரதமர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் இருந்து அகதிகள், வால்மீகி சமூகம் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவது, எஸ்சி பிரிவினருக்கான வால்மீகி சமூகத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவது, பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு சட்டசபையில் இட ஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடு பலனுக்கான பல சமூகங்களின் தகுதி குறித்தும் அவர் பேசினார்.
வாரிசு அரசியல், ஊழலுக்கும் ஜம்மு காஷ்மீர் பலியாகிவிட்டது. இங்குள்ள முந்தைய அரசுகள் நமது ஜம்மு காஷ்மீர் வங்கியை நாசமாக்கியுள்ளனர். தவறான நிர்வாகத்தால், வங்கிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், நீங்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான ரூபாயை இழக்கும் அபாயத்தில் உள்ளீர்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மக்களை தனது குடும்பமாக கருதுவதாக பிரதமர் கூறினார். ரம்ஜான் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் இதயத்தில் தங்கியுள்ளனர். காஷ்மீரிகளின் இதயங்களில் ‘மைன் ஹூன் மோடி கா பரிவார்’ இருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகள் எந்த நிலையிலும் நிற்காது என்று உறுதியளிக்கிறேன்.
இன்னும் சில நாட்களில் ரம்ஜான் தொடங்க உள்ளது. நாட்டு மக்களுக்கு ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.நாளை, மகா சிவராத்திரியை கொண்டாடுவோம், மகா சிவராத்திரிக்கும் நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.