பெண்கள் நலன்களுக்கு இரட்டை என்ஜின் அரசு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது, பேசிய அவர், மஹ்தாரி வந்தன் திட்டத்தை அர்ப்பணிக்க வாய்ப்பு கிடைத்தது தமக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும், இத்திட்டத்தின் கீழ் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் (பெண்கள்) வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ரூ.655 கோடி இன்று டெபாசிட் செய்யப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்காக உங்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் வேறு சில நிகழ்ச்சிகளுக்காக உத்தரபிரதேசத்தில் இருக்கிறேன். நான் பாபா விஸ்வநாதரின் பூமியான காசியில் இருந்து பேசுகிறேன், அவர் உங்கள் மீது ஆசீர்வாதத்தைப் பொழிகிறார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
தாய் மற்றும் சகோதரிகள் அதிகாரம் பெற்றால், முழு குடும்பமும் அதிகாரம் பெறுகிறது. எனவே, இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் முன்னுரிமை தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நலனே என்றும் பிரதமர் கூறினார்.
மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான உத்தரவாதத்தை பாஜக அளித்துள்ளது. முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான சத்தீஸ்கர் அரசாங்கம் அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.