ராகுல் காந்தியின் எதிர்காலம் இருளில் உள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை சோனித்பூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ரஞ்சித் தத்தா சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது ராகுல் காந்திக்கு வாக்களிப்பது என்றும், பாஜகவுக்கு வாக்களிப்பது என்பது நரேந்திர மோடிக்கு வாக்களிப்பது என தெரிவித்தார். பாரதம் விஸ்வகுருவாக மாறும் என்று நம்புபவர்கள் இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
ராகுல் காந்தியின் எதிர்காலம் இருண்ட நிலையில் உள்ளதாகவும், அவரை பின்பற்றுபவர்களின் எதிர்காலம் இருண்ட நிலைக்கு சென்றுவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஒன்றரை மாதங்களில், பல காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். 2026-ஆம் ஆண்டுக்குள் அசாமில் காங்கிரஸ் கட்சி இருக்காது என்று நம்புகிறேன்.மேலும் பல தலைவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்றும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகும் இந்த இணையும் செயல்முறை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பூபன் குமார் போரா 2025 ஆம் ஆண்டின் முதல் பகுதியில் பாஜகவில் சேருவார் என்றும் அவர் கூறினார்.