எல்லையோர கிராமங்களை நாட்டின் முழு கிராமமாக பாஜக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, எல்லையோர கிராமங்களின் வளர்ச்சி பணிகளை காங்கிரஸ் புறக்கணித்ததாக குற்றம்சாட்டினார். ஆனால் பாஜக அரசாங்கம் இந்த கிராமங்களை “முதல் கிராமங்கள்” என்று கருதுவதாகவும் அவர் கூறினார்.
எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தனது அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸின் சிந்தனை வளர்ச்சிக்கு எதிரானது. நாட்டின் எல்லையோர கிராமங்களை நாட்டின் கடைசி கிராமங்கள் என்கிறார்கள். எதிரிகள் வந்து விடுவார்களோ என்ற பயம் காரணமாக எல்லையோர மாவட்டங்களையும், கிராமங்களையும் வளர்ச்சியடையாமல் வைத்துள்ளனர்.
ஆனால் எல்லைப் பகுதிகளையும், எல்லைக் கிராமங்களையும் கடைசி கிராமங்களாகக் கருதாமல், நாட்டின் முதல் கிராமங்களாகக் கருதுகிறோம். எங்களைப் பொறுத்தவரை, நாட்டின் எல்லைகள் இத்துடன் முடிவதில்லை. நாடு இங்கிருந்து தான் தொடங்குகிறது. சுமார் 4 கோடி ஏழைகள் பிரதமர் வீடு திட்டத்தின் மூலம் வீடுகளை பெற்றுள்ளனர். பார்மரில், சுமார் 1.75 லட்சம் ஏழைகள் இந்த திட்டத்தின் பலனைப் பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
பார்மர் நகரின் எல்லையில் ரூ.72,000 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்படவுள்ளது.வரும் காலங்களில் இப்பகுதியில் வேலைவாய்ப்புகள் உருவாகி இளைஞர்களுக்கு புதிய பாதைகள் உருவாக்கப்படும்.
நான் மூன்றாவது முறையாக பதவியேற்கும் போது, இங்கு வந்து சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைப்பேன் என உறுதியளிக்கிறேன் என அவர் தெரிவித்தார்.
ஜல் ஜீவன் திட்டத்தில் காங்கிரஸ் ஊழல் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு இருந்த காலத்தில் ஜல் ஜீவன் மிஷனில் பெரும் ஊழலில் ஈடுபட்டது. ராஜஸ்தானுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.