அதிமுக என்ற மாபெரும் இயக்கம் டிடிவி தினகரன் வசம் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுக கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில், பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைக் காண்ட்ராக்டர்களிடம் எடப்பாடி பழனிசாமி தாரை வார்த்து விட்டார். அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவருமே பெரும் காண்ட்ராக்டர்கள்தான். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும், திமுகவும் ஒன்றுதான். காரணம் இருவருமே ஊழல் என்ற பாதையில் சென்றவர்கள்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு உண்மையான தலைவர்கள் கையில் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் வரும். பகவான் ராமர் எப்படி 16 ஆண்டுள் வனவாசம் பேனோரோ அப்படி, 16 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துக் கொண்டு டிடிவி தினகரன் இந்த தேர்தலில் களம் காண்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போல டி.டி.வி.தினகரன் மக்களுக்காக அரசியல் செய்கிறார். அதிமுக தொண்டர்கள் டிடிவி தினகரனுக்கே வாக்களிப்பார்கள். அந்த அளவு தினகரன் மேல் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, டிடிவி தினகரன் வெற்றி பெற்றால் பொது மக்களுக்கும், தொகுதிக்கும் நல்லது நடக்கும் என்றார்.