“ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஊழல் செய்தார்கள், மக்களை மறந்துவிட்டார்கள் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றிய நட்டா,
“ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் என்ன நடந்தது. ஊழல் செய்தார்கள், உறவுமுறையை ஊக்குவித்தார்கள், ஆனால் மக்களை மறந்துவிட்டார்கள்.
நாட்டு மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய தான் பாஜக கடமைப்பட்டுள்ளது.
ஏழைகள், பெண்கள், தலித்துகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலனை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை. நாட்டில் உள்ள ஏழைகளுக்கு 3 கோடி இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று எங்கள் அரசு அறிவித்துள்ளது.
மேலும், ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டில் லட்சக்கணக்கான உயிர்களை தொடர்ந்து காப்பாற்றுவோம்.
இரண்டு நூற்றாண்டுகளாக நம்மை ஆட்சி செய்த இங்கிலாந்தைக் கூட பின்னுக்குத் தள்ளி இன்று இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
மோடியின் தொலைநோக்கு தலைமை இல்லாமல் இது சாத்தியமில்லை. பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
மோடியைத் தேர்ந்தெடுத்து, 2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா ஜொலிப்பதைப் பாருங்கள் எனத் தெரிவித்தார்.