பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த மாணவ, மாணவிகள் குறித்து பார்க்கலாம்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேடபாளையத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த மகாலட்சுமி என்ற மாணவி 600 -க்கு 598 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
நெல்லையில் சாதி வன்மத்தால் கொடூர தாக்குதலுக்கு ஆளான நாங்குநேரி மாணவன் சின்னதுரை, 600 -க்கு 469 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.
மயிலாடுதுறையில் மாணவி சாய்கண்ணமை என்பவர், பொருளாதாரம், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.
மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை கிராமத்தில் குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர் வீரசிவாஜி 303 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூர் தனியார் பள்ளியில் படித்த செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீ மதி 600 -க்கு 589 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வேடன் வயல் பகுதியில் தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவன் தருண், தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தருணுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சூரப்ப நாயக்கன் சாவடியைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி, இயற்பியல் தேர்வு எழுதிய மார்ச் 15 -ஆம் தேதி அவரது தந்தை உயிரிழந்தார். இருப்பினும் தேர்வு எழுதிய ராஜேஸ்வரி , 600-க்கு 474 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த நெய்க்காரப்பட்டியில் மாணவி அப்சரா நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். இவர், 600 -க்கு 592 மதிப்பெண் பெற்று மாவட்டத்திலேயே 2-ம் இடம் பிடித்துள்ளார்.
இதனிடையே, புழல் சிறையில் 24 ஆண் கைதிகள் மற்றும் 2 பெண் கைதிகள் என மொத்தம் 32 பேர் தேர்விதேர்ச்சி பெற்றுள்ளனர்.