பிரதமர் பேசியதை திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு மாநில முதலமைச்சராக இருந்து கொண்டு குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல், பாரத பிரதமர் நரேந்திர மோடிஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை திரித்துக் கூறி, அவதூறு பரப்புவது மு.க.ஸ்டாலினின் அற்ப அரசியலை வெளிச்சமிட்டு காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
நவீன் பட்நாயக்கை விட பலம் வாய்ந்தவராக வளம் வரும் ஓய்வு பெற்ற IAS அதிகாரி வி.கே.பாண்டியனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து பேசும் பொழுது பிரதமர் கூறிய வார்த்தைகளை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக பிரதமர் பேசியதாக கூறுவது முற்றிலும் தவறான அரசியல் வழி என்றும் அவர் கூறியுள்ளார்.
பூரி ஜெகநாதரின் கருவூல சாவியை விரைவில் மீட்டெடுப்போம் என்கிற முழக்கத்தை பாஜக முன்னெடுத்துள்ள நிலையில், வி.கே.பாண்டியனை குறிக்கும் விதத்தில் பிரதமர் பேசியதை ஏதோ தமிழர்களுக்கு எதிராக பேசியதாக மு.க.ஸ்டாலின் திரித்துக் கூறுவது நாகரீகம் அற்ற செயல் என்றும் எல்.முருகன் கூறியுள்ளார்.
தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அதிக அன்பை கொண்டுள்ள பாரத பிரதமர் மீது அவதூறு பரப்பும் செயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.