ராஜஸ்தானில் மக்களவை தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை பாஜக பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 இடங்களை இழந்து பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கான காரணம் என்ன? காங்கிரஸ் சாதித்தது எப்படி? என்பது பற்றி தற்போது
பார்க்கலாம்.
ராஜஸ்தானில் கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும் எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத காங்கிரஸ் இந்த தேர்தலில் 8 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது.
ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி நாகௌர் தொகுதியிலும், சிபிஎம் சிகார் தொகுதியிலும், பாரத் ஆதிவாசி கட்சி பன்ஸ்வாரா தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், பூபேந்தர் யாதவ், கஜேந்திர சிங் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோட்டா ஆகியோர் மிக குறைந்த அளவில், 50,000 வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு, முன் ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், இந்த தேர்தலில், பாஜகவுக்கு எதிராக ஒரு வலிமையான கூட்டணியை முதலில் கட்டமைத்தது.
CPIM, RLP மற்றும் BAP உடன் சேர்ந்து தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், பிரச்சாரங்களையும் சரியாக செய்தது.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி ,ராகுல் காந்தி பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ராஜஸ்தானில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
ராஜஸ்தானில் ஏற்கெனவே வெற்றிபெற்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மக்கள் விரோதமாக இருக்கிறது என்றும், விவசாயிகளை மதிக்காத அரசாக பாஜக செயல்படுகிறது என்றும் பிரச்சாரம் செய்த காங்கிரஸ், சாதிய உணர்வுகளையும் சரியாக பயன்படுத்திக் கொண்டது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ராஜஸ்தான் அமைச்சரவையில் குஜ்ஜார் ,மீனா மற்றும் ஜாட் சமூகத்தினருக்கு உரிய அங்கீகாரத்தை பாஜக வழங்கவில்லை என்று காங்கிரஸ் செய்த விமர்சனம்,அந்தந்த சமூக மக்களை பாஜகவுக்கு எதிராக திருப்பியது.
ஜாட் சமூகத்திற்கு முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவிகளை பாஜக கொடுக்க மறுக்கிறது என்று உணர்வை ஜாட் மக்களிடம் காங்கிரஸ் வெற்றிகரமாக ஏற்படுத்தி இருந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு முன், ஜாட் இனத்தைச் சேர்ந்த சுரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் கஸ்வான் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார்.
பாஜகவின் முதல் மற்றும் ஒரே ஜாட் மாநிலத் தலைவரான சதீஷ் பூனியாவை பாஜக ஓரங்கட்டிய அதே நேரத்தில், இதற்கு நேர்மாறாக, காங்கிரஸின் மாநிலத் தலைவராக ஜாட் இனத்தைச் சேர்ந்த கோவிந்த் சிங் தோதாஸ்ரா தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இருந்து வருவதும் பாஜகவுக்கு ஜாட் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும், ராஜஸ்தானில் அக்னி பாத் திட்டத்துக்கு எதிரான இளைஞர்களின் வாக்குகளை எளிதாக காங்கிரசால் பெறமுடிந்தது.
மேலும், பெண் மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்காதது மற்றும் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது என பாஜக மேலிருந்த அதிருப்தியை காங்கிரஸ் தனக்கு சாதகமாக்கி கொண்டது.
தோல்பூரின் ஜாட்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மத்திய பட்டியலில் சேர்க்காத பாஜக மீது கடும் அதிருப்தியில் ஜாட் சமூகத்தினர் முற்றிலுமாக இந்த முறை பாஜகவை நிராகரித்து விட்டனர் என்று தெரிய வருகிறது.
ஜாட் பகுதிகளைப் போலவே போலவே, குஜ்ஜார்-மீனா சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதிகளிலும் , மற்றும் பிற்படுத்தப்பட்டோரும் சிறுபான்மையினரும் அதிகம் வாழும் பகுதிகளிலும் உள்ள கிழக்கு ராஜஸ்தானில் பாஜக தோல்வியை அடைந்தன.
இவை தவிர, வேலையில்லாத் திண்டாட்டம் முதல் இடஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்புச் சட்டம் குறித்த மக்களிடையே ஏற்பட்ட அச்சம் வரை இந்த அதிருப்தி காங்கிரசுக்கு பலமாக அமைந்து விட்டன. பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளும் பாஜகவுக்கு எதிராக ராஜஸ்தான் மக்களை திருப்பியது என்று கூறப்படுகிறது.