முன்னோர்களின் தியாகத்தால் தான் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம் என ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றும் வகையிலும் மற்றும் அவர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் தியாக சுவர் மற்றும் பாரத மாதாவின் சிலை திறப்பு நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
அப்போது, விவேகானந்தா கேந்திரியா சார்பாக மோகன் பகவத்துக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விவேகானந்தா கேந்திராவினுடைய தேசிய தலைவர் பாலகிருஷனண் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் ,
நம்முடைய பாரத நாடு இன்றும் உயிரோட்டத்தோடு இருக்கிறது, அழியாமல் இருக்கிறது என்பதை நாம் நினைத்து பெருமைப்பட வேண்டும் என்றார்.
இந்த பண்பாட்டை உருவாக்குவதற்கும் இந்த நாட்டை காப்பாற்றுவதற்கும் பல கோடி பேர் உயிர் தியாகம் செய்துள்ளதாகவும், அப்படிப்பட்ட பாரத நாட்டில் நாம் பிறந்திருக்கின்றோம் என்பது பெருமைக்குரிய விஷயம் என அவர் தெரிவித்தார்.
மேலும், இயற்கை வழிபடக்கூடிய நம்முடைய பண்பாடு தான் உலகத்திலே ஒரு குடும்பமாக பார்க்கக்கூடியது என்றும் மோகன் பகவத் கூறினார்.