13 ஆண்டுகளுக்குப் பிறகு மிக மோசமான குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இன எதிர்ப்பு வன்முறைக் கலவரங்கள் இங்கிலாந்து முழுவதும் பரவி வருகிறது. தீவிர வலதுசாரி பேரணிகளில் பயங்கர மோதல்கள் வெடித்துள்ளன. என்ன தான் நடக்கிறது இங்கிலாந்தில் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சௌத்போர்ட் (Southport) பகுதியில் நடந்த ஒரு வன்முறை தாக்குதல், ஒட்டுமொத்த பிரிட்டனையும் உலுக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
சௌத்போர்ட்டில் ஆரம்பித்த கலவரங்கள், லிவர்பூல் (Liverpool), லண்டன் (London) மற்றும் மிடில்ஸ்பரோ (Middlesbrough) போன்ற முக்கிய நகரங்கள் வரை பரவி தற்போது அரசு கட்டுப்பாட்டையும் மீறி இனமோதலாக மாறியுள்ளது.
கடந்த ஜூலை 29ஆம் தேதி, பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற ‘டெய்லர் சுவிஃப்ட் யோகா மற்றும் நடனப் பயிலரங்கில்’ கலந்து கொண்ட மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர்.
பிரிட்டனில் அடைக்கலம் கோரிய 17 வயதுடைய இஸ்லாமிய சிறுவனே இந்தச் சிறுமிகளைக் கத்தியால் குத்து கொலை செய்ததாக வதந்தி பரவியது.
சிறுமிகள் மீதான தாக்குதலுக்கு மூன்று மணி நேரத்துக்குள் AI செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கிய படங்கள் வேகம் வேகமாக சமூக ஊடகங்களில் பரவியது.
ஐரோப்பா படையெடுப்பு என்ற எக்ஸ் தளத்தில், பாரம்பரிய இஸ்லாமிய உடையில் இருக்கும் ஒருவர், இங்கிலாந்தின் நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே கத்தியை அசைப்பதாக அந்த பதிவு அமைந்திருந்தது. இந்த அப்பதிவு, குறுகிய நேரத்துக்குள் 9 லட்சம் மில்லியன் முறை பார்க்கப் பட்டுள்ளது.
மேலும், அடைக்கலம் கோருபவர்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் இன்னொரு பதிவும் ஒரு சில மணிநேரங்களில் 60,000 பேர்களால் பார்க்கப் பட்டுள்ளது.
பிரிட்டனின் அமைதியைக் குலைத்த வன்முறை கலவரங்களின் பின்னணியில், குடியேற்ற எதிர்ப்பு மற்றும் இனவெறி எதிர்ப்பு குழுக்கள் உள்ளதாகவும், இக்குழுக்களை தீவிர வலதுசாரிகள் இயக்குவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், அடைக்கலம் கோருபவர்களை தங்க வைக்கும் ஹோட்டல்களைக் குறிவைத்து, தீவிர வலதுசாரி குழுவினர், ரோதர்ஹாம் மற்றும் டாம்வொர்த்தில் கலவரங்களில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் வன்முறை மேற்கொண்ட கலவரக்காரர்களை பிரிட்டன் போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சுந்தர்லாந்து (Sunderland) பகுதியில் வன்முறையில் இறங்கிய குடியேற்ற எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. லிவர்பூல், மான்செஸ்டர், பிரிஸ்டல், பிளாக்பூல் மற்றும் ஹல் போன்ற இடங்களிலும், வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் போன்ற இடங்களில் வெடித்த வன்முறையால் சாலைகள் போர்க்களமாக காட்சியளித்தன.
சுமார் 700 வலதுசாரி ஆதரவாளர்கள் செயின்ட் ஜார்ஜ் கொடிகளை அசைத்து, தெற்கு யார்க்ஷயரில் உள்ள ரோதர்ஹாமில் உள்ள ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தினர்.
வன்முறையில் ஈடுபட்ட தீவிர வலதுசாரி எதிர்ப்பாளர்களுடனான நடந்த மோதல்களில் இங்கிலாந்துக் காவல்துறையினர் பலர் காயமடைந்தனர்.
இந்த வன்முறைகள் தொடர்பாக 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை உயரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், பிரிட்டனில் எல்லா மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்க உரிமை உண்டு என்றும் உறுதியளித்திருக்கிறார்.
மசூதிகளுக்கு புதிய அவசரகால பாதுகாப்புடன் கூடிய அதிக பாதுகாப்பு வழங்கப்படும் என்று பிரிட்டன் உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
பிரிட்டனில் அமைதி திரும்பும் வகையில், லிவர்பூலில் உள்ள கிறிஸ்தவ, முஸ்லீம் மற்றும் யூதத் தலைவர்கள் இங்கிலாந்தில் மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு கூட்டு வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
பிரிட்டன் அரசியலில் நீண்ட காலமாகவே நீறுபூத்த நெருப்பாக இருந்து வரும் அகதிகள் எதிர்ப்பு நேரம் பார்த்து வெடித்திருக்கிறது. இனி பிரிட்டன் சமூகத்தில் நிம்மதி இல்லாத சூழலே தொடர போகிறது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.