மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து அண்மையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகரும், இயக்குனரும் மற்றும் கேரள மாநில சலசித்ரா அகாடமியின் தலைவருமான ரஞ்சித் பாலியல் முறைகேடு புகார்களில் சிக்கியதை அடுத்து, நடிகர் சித்திக் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது சித்திக் மீது நடிகையும், மாடலுமான ரேவதி சம்பத் பாலியல் புகாரை முன்வைத்தார்.
இதையடுத்து பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்க பொதுச்செயலாளர் பதவியை சித்திக் ராஜினாமா செய்தார். இந்நிலையில் நடிகை ரேவதி சம்பத் அளித்த பாலியல் புகாரின் பேரில் கேரள போலீசார் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாலியல் புகார்களுக்கு ஆளான நடிகர்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது. பாலியல் புகார்கள் விஸ்வரூபம் எடுத்த நிலையில் மலையாள திரைப்பட நடிகர் சங்கம் நேற்று கூண்டோடு கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பாலியல் குற்றச்சாட்டுகள், புகார்களை யாரும் மறைக்க வேண்டியது இல்லை என பாஜகவை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், திரைத்துறை மட்டுமல்ல, மற்ற எந்த துறையாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.