2026 சட்டமன்றத் தேர்தலை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில், அக்கட்சியுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ஆளும் திமுக, ஆண்ட அதிமுகவுக்கு மாற்றாக அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், அவ்விரு கட்சிகளின் வாக்குகளை எப்படி கவரப் போகிறார் என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகள் மிகப்பெரிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டும் கடந்த சில தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வருகிறது. பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு, பிரச்சார உத்தி என சீமானின் புதிய முயற்சிகள் நாம் தமிழர் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்த்தியது.
ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்கு வங்கியை கணிசமாக உயர்த்தி வரும் சீமான், அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். நடிகர் விஜய்யை தம்பி என நட்பு பாராட்டிய சீமான், தமிழக வெற்றிக் கழகத்துடன் நிச்சயம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பார் என கூறப்பட்டது. சீமானின் அடுத்தடுத்த பேட்டிகளும் அதனை உறுதிபடுத்தும் வகையிலேயே அமைந்தன.
இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து தான் போட்டி என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருப்பது சொந்தக் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் சந்திக்கும் முதல் தேர்தலான சட்டமன்றத் தேர்தலை தனித்து சந்திக்க முடிவு செய்திருப்பதே சீமானின் தற்போதைய அறிவிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்துவதற்கு திமுக அரசு சார்பில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், திட்டமிட்டபடி மாநாட்டை நடத்துவதில் விஜய் உறுதியாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 8 முதல் 10 சதவிகிதம் வரையிலான வாக்குகளை பெறலாம் என கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த வாக்குகள் எந்த கட்சியிலிருந்து பிரியப் போகிறது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
திமுக அரசுக்கு எதிரான மக்களின் மனநிலை, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்காக மாறும் என அரசியல் விமர்சகர்கள் கருதும் நிலையில், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியான அதிமுகவின் வாக்கு வங்கியையும் தனது பக்கம் திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என்ற தகவலும் கசிந்திருக்கிறது. கட்சி தொடக்க அறிவிப்பிலிருந்து தற்போது வரை அரசியல் பேசாத விஜய், தனது கட்சி முதல் மாநாட்டில் அதிமுக, திமுகவை விமர்சிப்பார் என்பதும் தெரியவந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளும் அதிமுக, திமுகவை ஒட்டியே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து தேர்தலை சந்திக்கும் என பரவிய தகவலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்து போட்டி என அறிவித்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், அவ்விரு கட்சிகளுக்கு எதிரான வாக்குகளை எவ்வாறு அறுவடை செய்யப்போகிறார் என்பதற்கு அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளே பதிலாக அமையும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.