“சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கான கராத்தே மற்றும்
டேக்வாண்டோ பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” எனவும் “இத்திட்டம் படிப்படியாக அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்” என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் குக்ஸ் சாலையில் உள்ள சென்னை அரசு உயர் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான கராத்தே பயிற்சி திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கிவைத்தார். பின்னர், மாணவிகள் உடன் இணைந்து கராத்தே பயிற்சி மேற்கொண்டார். பயிற்சியின்போது, மாணவிகள் ஓடுகளை உடைத்து அசத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, “2024 – 2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டு பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கான கராத்தே பயிற்சி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறினார்.