கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 6 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
கொல்லப்பட்டி பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நிதின், மிதுன் கிருஷ்ணா ஆகிய 2 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அங்கன்வாடி மையத்திற்கு வந்த குழந்தைகள் உட்பட 6 குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர் சிவகாமி மற்றும் செல்வநாயகி ஆகியோர் மதிய உணவு வழங்கியுள்ளனர்.
அப்போது உணவு உண்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து உணவு சமைத்த பாத்திரத்தில் பல்லி இருப்பதைக் கண்ட பணியாளர்கள் குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.