காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், படுக்கைகள் இல்லை எனக் கூறி குழந்தை பெற்ற தாய்மார்களை பச்சிளம் குழந்தைகளுடன் தரையில் படுக்க வைத்த கொடுமை அரங்கேறியுள்ளது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஐந்து அடுக்கு மாடிகள் கொண்ட மகப்பேறு நல மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் 10க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஐந்தாவது தளத்தில் உள்ள பராமரிப்பு வார்டில், பிரசவம் ஆன தாய்மார்கள் மற்றும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்கள் என மொத்தம் 96 பெண்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால், படுக்கைகள் இல்லை எனக் கூறி கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக 50 தாய்மார்களை பச்சிளம் குழந்தைகளுடன் கீழே படுக்க வைத்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தாய்மார்களுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தராமல் மகப்பேறு மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது உறவினர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.