பா.ஜ.க, பா.ம.கவை பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை இல்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையை அடுத்தகொல்லங்குடியில் பா.ஜ.க சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய இனை அமைச்சர் எல்.முருகன் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: அரசை மிரட்டவே திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தவதாக ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதன்படியே தற்சமயம் ஆட்சியில் பங்கு என கோரிக்கை எழுந்துள்ளது.
பா.ஜ.க, பா.ம.க இரு கட்சிகளும் மத, சாதி கட்சிகள் எனவும் அதனால் அதற்கு மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவில்லை என திருமாவளவன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது எல்லோருக்கும் பொதுவான கட்சி இல்லை என்றும் அது ஒரு சமூகத்திற்கான கட்சி என தெரிவித்தார். பா.ஜ.க, பா.ம.கவையும் பற்றி பேச திருமாவளவனுக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்றும் அவர் கூறினார்.
முதல்வரின் வெளிநாடு பயனம் குறித்த கேள்விக்கு அவர் ஏற்கனவே சென்ற பயனத்தின்போது ஈர்த்துவந்த முதலீடுகள் குறித்தும் தற்போது ஈர்த்துவந்த முதலீடுகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்தில் சாத்தியமில்லை என செல்லூர் ராஜூவின் கருத்து குறித்த கேள்விக்கு எங்கள் கட்சியில் அது சாத்தியமாகியுள்ளது என்றும் எங்களது கூட்டனி கட்சியினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
மீனவர் பிரச்சனை குறித்த கேள்விக்கு மீனவர் கைது செய்யப்படுவதும் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது என்றும் இரு நாட்டு மீனவர்களுடனான பேச்சுவார்த்தை என்பது கொரோனா காலம், அதற்கு அடுத்தாற்போல் இலங்கை ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டதாகவும், அதனை மீண்டும் துவங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.