குடும்ப ஆட்சியால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிபோனதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
மீதமுள்ள 2 கட்ட வாக்குப்பதிவு வரும் 25 மற்றும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஸ்ரீநகரில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் சதி திட்டங்களை முறியடித்து தேர்தலை நடத்தி வருவதாகவும், முதன்முறையாக மக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதற்கட்ட தேர்தலில் 61 சதவீதத்திற்கு மேல் வாக்கு பதிவாகியுள்ளதை சுட்டிக்காட்டி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்களிடையே கல்வி அறிவு வளர்ச்சியடைந்துள்ளது என்றும், குடும்ப ஆட்சியால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிபோனது எனவும் சாடியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் கைகளில் கற்களுக்கு பதிலாக தற்போது புத்தகம், பேனா இருப்பதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். காங்கிரசும், தேசிய மாநாட்டு கட்சியும் ஜம்மு காஷ்மீர் மக்களை ஏமாற்றி வந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.