சென்னை துரைப்பாக்கத்தில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொழிலுக்கு வந்த பெண் கொலை செய்யப்பட்டது எப்படி ? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
மாதவரம் பொன்னியம்மேடு பகுதியைச் சேர்ந்த தீபா என்ற வெள்ளையம்மாள் கடந்த 17 ஆம் தேதி வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். வேலைக்குச் சென்ற தீபா மீண்டும் வீடு திரும்பாத நிலையில், தொலைபேசியில் இருந்த அப்ளிகேசன் மூலமாக ஆய்வு செய்ததில் துரைப்பாக்கம் அருகே அவர் இருப்பதாக கண்டறியப்பட்டது.
தீபாவை காணவில்லை என அவரது அண்ணன் துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகார் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்த கறைகளுடன் கிடந்த சூட்கேஸ் ஒன்று கிடைத்தது.
பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை உள்ளே வைத்திருப்பது தெரியவந்தது.
பெண்ணின் உடல் அடையாளங்களை வைத்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாயமான மாதவரத்தைச் சேர்ந்த தீபா என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
சென்னை காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி.சக்ரவர்த்தி, அடையாறு காவல் துணை ஆணையர் பொன்.கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அதே பகுதியில் ஒருவர் சூட்கேஸ் கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
விசாரணையை தீவிரப்படுத்தியதில் துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகர் 4வது தெருவில் வசித்து வரும் மணிகண்டன் என்பது தெரியவந்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மணிகண்டனிடம் நடைபெற்ற விசாரணையில் அவர் அளித்திருக்கும் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெருங்குடி பகுதியில் தனியார் கார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மணிகண்டன், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் தீபாவை தொலைபேசி மூலமாக அழைத்து தனிமையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், முன்பு பேசிய பணத்தை விட அதிகளவு பணம் கேட்ட தீபாவுடன் மணிகண்டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாய்த்தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், இந்த விவகாரத்தை வெளியில் சொல்லுவேன் எனக்கூறிய தீபாவை, மணிகண்டன் சுத்தியால் அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
என்ன செய்வதென்று புரியாத மணிகண்டன், தீபாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி, எலும்புகளை உடைத்து சூட்கேஸில் துணி வைப்பது போல மடித்து வைத்துள்ளார். பின்னர் குமரன் குடில் குடியிருப்பில் புதியதாக கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தின் அருகே அந்த சூட்கேஸை வீசி சென்றிருக்கிறார்.
அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட தீபாவின் உடலை மணிகண்டன் இரண்டு நாட்கள் வீட்டிலேயே வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான துரைப்பாக்கத்தில் சர்வசாதாரணமாக பெண்ணை கொலை செய்து விட்டு சூட்கேஸில் வைத்து வீசிச் சென்றிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.