இந்தியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனங்களில் ஒன்றான Swiggy, பங்குச்சந்தையில் அறிமுகமாக உள்ளது. Swiggy, IPOக்கு செபியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.
ஆண்டின் பிற்பகுதியில் பண்டிகைக் காலம் என்பதுபோல பங்குச்சந்தையிலும் புதிய IPO பட்டாசுக்கள் வந்து வணிக சந்தைக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.
நீண்ட காலமாகவே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உணவு மற்றும் மளிகை விநியோக நிறுவனமான Swiggy தனது ஐபிஓவைத் தொடர செபியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வெளியீடுகளின் மூலம், சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி திரட்டுவதே Swiggy இன் நோக்கமாகும்.
உணவுத் துறையில் பயன்படுத்தப்படாத திறனை உணர்ந்த ஸ்ரீஹர்ஷா, நந்தன் ரெட்டி மற்றும் ராகுல் ஜெய்மினி ஆகியோருடன் சேர்ந்து, Swiggy யை அதிகாரப்பூர்வமாக 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கினார். 25 உணவகங்களில் இருந்து ஆறு டெலிவரி பணியாளர்கள் என்று சாதாரணமாகத் தொடங்கிய Swiggy, எட்டு மாதங்களுக்குள் ஒரு மில்லியன் ஆர்டர்களை மாதந்தோறும் செயல்படுத்தி வெற்றிகரமாக வளர்ந்தது.
இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான உணவகங்களுடன் இணைந்துள்ள Swiggy, இந்தியாவின் மெட்ரோ நகரங்கள் மற்றும் இரண்டாம் அடுக்கு நகரங்களிலும் தனக்கான வலிமையான வலுவான இடத்தைப் பெற்றுள்ளது.
2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி Swiggy நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 1 புள்ளி 09 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்றும். சுமார் 4,700க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ளது எனவும் Tracxn தரவுகள் தெரிவித்துள்ளன.
இந்த நிதியாண்டில் Swiggy வருவாயில் 36 சதவீதம் உயர்ந்து 11,247 கோடி ரூபாயாக இருந்தது. உணவு விநியோகம், இன்ஸ்டாமார்ட் மற்றும் டைனிங் அவுட் என மொத்த ஆர்டர் மதிப்பாக 35,000 கோடி ரூபாயைப் பதிவு செய்திருக்கிறது Swiggy.
அதே சமயம் கடந்த ஆண்டு 4,179 கோடி ரூபாய் நஷ்டத்தைக் கணிசமாக குறைத்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு, நிறுவனத்தின் நஷ்டக்கணக்கு 2,350 கோடி ரூபாயாக காட்டப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில் Swiggy ஸ்டோர்ஸ் மூலம் பொதுவான தயாரிப்பு விநியோகம் மற்றும் Swiggy Go உடனான உடனடி பிக்அப்/டிராபாஃப் சேவைகள் என Swiggy தன் சேவைகளை பன்முகப்படுத்தியது. 2020 ஆம் ஆண்டு Swiggy Genie என பெயர் மாற்றப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் Swiggy Storesஐ மூடிவிட்டு BigBasket க்குப் போட்டியாக Instamartஇன் கீழ் அனைத்து மளிகை பொருட்கள் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது Swiggy .
கடந்த ஏப்ரல் மாதம் ‘Swiggy Pawlice’ என்ற புதிய சேவையை Swiggy அறிமுகப்படுத்தியுள்ளது. இது காணாமல் போன செல்லப்பிராணிகளைப் பற்றி புகார் செய்ய உதவுகிறது. காணாமல் போன செல்லப்பிராணியைக் கண்டறிந்ததும், Swiggy குழு செல்லப் பிராணிகளை அதன் உரிமையாளர்களிடம் பத்திரமாக கொண்டு சேர்க்கிறது.
இந்த புதுமைகளால் IPO வெளிவருவதற்கு முன்பே பல உயர்மட்ட பிரபலங்கள் Swiggy முதலீட்டாளர்கள் ஆகி இருக்கிறார்கள். இந்தி திரைத் துறை பிரபலங்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், கரண் ஜோஹர் மற்றும் பிரபல விளையாட்டு வீரர்கள் ராகுல் டிராவிட், ஜாகீர் கான், ரோகன் போபண்ணா Swiggyயில் முதலீடு செய்துள்ளனர்.
SoftBank Vision Fund, Prosus, Accel மற்றும் Elevation Capital போன்ற உலகளாவிய முதலீட்டாளர்களும் Swiggy இல் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்துள்ளனர். மேலும், இன்னோவ்8 நிறுவனர் ரித்தேஷ் மாலிக், மற்றும் மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸின் தலைவர் ராம்தேயோ அகர்வால் ஆகியோரும் Swiggy யின் முன்கூட்டிய ஐபிஓ பங்குகளில் முதலீடு செய்துள்ளனர்.
இந்தியாவின் உணவு விநியோக சந்தையில் 90 சதவீத பங்குகளை Swiggy மற்றும் Zomato மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. ஏற்கனவே, Zomato தேர்வுமுறை மற்றும் விலை நிர்ணயம் என உணவு விநியோக சந்தையில் கோலோச்சி வருகிறது.
2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு விநியோக சந்தையில் Swiggy IPO க்கு நகர்வதை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் கவனிக்கிறார்கள். Swiggy கடுமையான செலவுக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தி, தள்ளுபடிகளைக் குறைத்து, அதன் சலுகைகளை பன்முகப்படுத்தி உள்ளது.
ஐபிஓவில் 3,750 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய வெளியீடு மற்றும் விற்பனைக்கான சலுகை (OFS) 6,500 கோடி ரூபாயைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஒருங்கிணைந்த IPO 10,000 கோடி ரூபாய்க்கும் மேல் கொண்டு வரும் என்று பங்கு சந்தை வல்லுநர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக Zomatoவில் இருந்து விலக விரும்பும் முதலீட்டாளர்கள், Swiggyக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.