திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை நடைபெறும் திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்குடை ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும் என்றும்,
மாறாக ஈ.வே.ரா சாலை, ராஜாஜி சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
யானைக்கவுனி பாலத்தை கடக்கும் போது சூளை ரவுண்டானவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை என்றும், சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜா முத்தையா சாலையில் ஊர்வலம் வரும்போது மசூதி பாயிண்டிலிருந்து
சூளை ரவுண்டான நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை என்றும்,
மாறாக, வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி சந்திப்பு சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை எனவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.