சென்னை அமைந்தகரையில் வேலைக்கார சிறுமியை அயன்பாக்ஸ் மற்றும் சிகரெட்டால் சூடு வைத்து கொலை செய்தததாக வீட்டின் உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வறுமையின் காரணமாக வேலைக்கு வந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரை சதாசிவம் மேத்தா நகர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஸ். கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுவரும் நவாஸுக்கு நாசியா எனும் மனைவியும், 6 வயதில் மகன் ஒருவரும் உள்ளனர். இவர்களது வீட்டில் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 15 மாதங்களாகவே தங்கியிருந்து வீட்டுவேலை செய்து வந்த நிலையில், தீபாவளி அன்று அந்த சிறுமி குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமியின் உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியதன் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமி சரியாக வீட்டுவேலை செய்யவில்லை எனக்கூறி நவாசும், நசியாவும் மாறி மாறி தாக்கியதாகவும், அயன்பாக்ஸ் மற்றும் சிகரெட்டுகளை வைத்து சூடு வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அந்த சிறுமி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் தங்களது 6 வயது மகனுடன் பாசமாக பழகியதை பார்த்து ஆத்திரமடைந்த பெற்றோர்கள், அவரை தொடர்ந்து துன்புறுத்தி சித்ரவதை செய்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் தங்களின் உறவினர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களின் மூலமாக தொடர்ந்து அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தீபாவளி அன்று கடுமையாக தாக்கியதில் மயக்கமடைந்த சிறுமி உயிரிழந்த நிலையில், அந்த கொலையை மறைக்கவே சிறுமியின் உடலை குளியறையில் வைத்துவிட்டு, குளிக்கச் சென்ற சிறுமி உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் நடத்திய நாடகமும் தற்போது அம்பலமாகியுள்ளது.ஒரு நாள் முழுவதும் உடலை அப்புறப்படுத்த முயன்றும் முடியாத காரணத்தினால் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருப்ப்பதும் விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமி கொலை செய்யப்பட்டது உறுதியானதால், முகமது நவாஸ், அவரது மனைவி நாசியா, நண்பர்களான லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி, மகேஸ்வரி, சீமா பேகம் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருப்பதால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா ? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கொலையான தகவல் அறிந்ததும் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்த சிறுமியின் தாய், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தன்னால் மகளின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முடியாது என்பதால் சென்னையிலே அடக்கம் செய்யுமாறு கண்ணீர்மல்க கேட்டுக் கொண்டார். தாயின் வேண்டுகோளை ஏற்று அண்ணாநகரில் உள்ள மின் மயானத்தில் சிறுமியின் உடல் போலீசார் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் பெனாசீர் பாத்திமா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் கணவரை இழந்த பெண் ஒருவர் வறுமையின் காரணமாக தன் மகளை வேலைக்கு அனுப்பிய நிலையில் அவருக்கு நிகழ்ந்த கொடுமை அனைவரையும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.