சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு அதிமுக மாவட்டச் செயலாளர்களை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு முன்னதாக உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனவும், அதற்கு மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தயாராக வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் எனவும், கூட்டணியை பற்றி கவலைப்படாமல் கட்சிப் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆளும் திமுக அரசில் நிகழக்கூடிய மக்கள் பிரச்னைகளை ஆதாரத்துடன் வெளிக் கொண்டு வரவேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். மேலும், திமுக, பாஜகவை தவிர்த்து பிற கட்சிகளை கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், தந்தை புகழ்பாடும் ஆட்சியாகவே திமுக திகழ்வதாவும் குற்றம் சாட்டினார்.
மேலும், அதிமுக சரியான கட்சியாக இருப்பதால் விஜய் விமர்சிக்கவில்லை எனவும், விஜய் கட்சி தொடங்கியது குறித்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.