சென்னை, பெங்களூரு, நொய்டா போன்ற பெருநகரங்களில் வீட்டு வாடகை 40 முதல் 50 சதவிகிதம் வரை உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரானா காலகட்டத்தில் காலியாக இருந்த வீடுகளின் வாடகை திடீரென உயர்ந்திருப்பதன் காரணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
தமிழகம் உட்பட நாடுமுழுவதும் கொரனாவின் நோய்த்தொற்று தாக்கம் உச்சத்தை தொட்டிருந்த நிலையில் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்பை வழங்கியிருந்தன. பல்வேறு ஊர்களிலிருந்து பெருநகரங்களுக்கு வந்திருந்த தொழிலாளர்கள் பலர் அதனை பயன்படுத்தி சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்தனர். அதன் காரணமாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் பெரும்பாலான வாடகை வீடுகள் காலியாக காணப்பட்டன.
கொரானா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்த நிலையில் மீண்டும் அலுவலகத்திற்கே வந்து பணிபுரியுமாறு தொழிலாளர்களை தொழில் நிறுவனங்கள் வலியுறுத்த தொடங்கின. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகர்ப்பகுதிகளை நோக்கி நகர்ந்தனர். கொரானா தொற்று காலத்தில் காலியாக இருந்த வீடுகள் மீண்டும் நிரம்பத் தொடங்கின. காலப்போக்கில் வாடகை வீடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட அதன் வாடகைத் தொகையையும் பன்மடங்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதிலும் சென்னை, பெங்களூர், நொய்டா, ஐதராபாத் உள்ளிட்ட நாட்டின் மெட்ரோ நகரங்களில் வீட்டு வாடகை யாரும் எதிர்பாராத அளவிற்கு உயர்ந்திருக்கிறது. உதாரணமாக பெங்களூரில் 77 சதவிகிதம் வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது 30 ஆயிரம் ரூபாயாக இருந்த வீட்டு வாடகை தற்போது 53 ஆயிரமாக உயர்ந்திருப்பதாக வாடகைக்கு குடியிருக்கும் பொதுமக்கள் வேதனை தெரிவிகின்றனர்.
இதே போல நொய்டாவில் பெண் ஒருவர் எதிர்கொண்ட பிரச்னை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாடகை ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பாகவே வாடகையை உயர்த்தியதோடு, வீட்டில் குடியிருக்கும் பெண்ணிடம் உயர்த்தப்பட்ட வாடகையை கேட்டு மிரட்டுவதாகவும் வீட்டு உரிமையாளர் மீது புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து வேலைக்காக சென்னையை நாடிவந்திருக்கும் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து வாடகை வீடுகளில் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். அவ்வாறு வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் இளைஞர்கள் பலருக்கு இந்த வீட்டு வாடகை உயர்வு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அதிலும் வேலை தேடி பெருநகரங்களை நாடி வரும் இளைஞர்களுக்கு வீட்டு வாடகை உயர்வு அவர்களின் வேலைவாய்ப்பையும் முடக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
பெங்களூரு போன்ற பெருநகரங்களில் புதிதாக வருவோரிடம் அதிக வாடகை வசூலிக்கலாம் என எண்ணி ஏற்கனவே குடியிருப்பவர்களை வெளியேற்றும் முயற்சியிலும் வீட்டு உரிமையாளர்கள் இறங்கியுள்ளனர். பெரும்பாலான நகரங்களில் இரண்டு வருடமாக உயர்த்தப்படாமல் இருந்த வீட்டு வாடகை தற்போது திடீரென 40 முதல் 50 சதவிகிதம் வரை உயர்ந்திருக்கிறது. வேலைக்காக நகரங்களுக்கு வந்து வேலைபார்ப்போருக்கு வீட்டு வாடகை உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தியிருப்பதோடு மன உளைச்சலுக்கும் உள்ளாக்கியுள்ளது.