சொத்து வரி உயர்வு, உள்ளிட்டவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
வாடகை கட்டடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கீழமாசி வீதியில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டன.
திருச்சியிலும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சொத்து வரி உயர்வு, வாடகை கடைகளுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை திரும்பப்பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கடையடைப்பு போராட்டத்தால் பிரதான கடை வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
திண்டுக்கல்லில் 18 சதவீத ஜிஎஸ்டியை நீக்க வலியுறுத்தி அனைத்து இரும்பு வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல்லில் உள்ள 250க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்துள்ளனர்.
விருதுநகரில் வியாபார தொழில்துறை சங்கம் மற்றும் மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி மெயின் பஜார் மற்றும் தெப்பக்குளம் பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோட்டிலும் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்டவற்றுக்கு கண்டனம் தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பை சேர்ந்த 75 சங்கங்கள் இந்த கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டன.
பரமத்தி வேலூர் பேருந்து நிலையம், சுல்தான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காட்சியளித்தன.