ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேய் மழை வெள்ளத்தில் சிக்கி விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல வட மாவட்டங்கள் உருக்குலைந்துள்ளன. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த சனிக்கிழமை இரவு மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இந்த புயலால் விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தைச் சந்தித்தன. விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்களாக இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் மாவட்டமே வெள்ளக் காடாக மாறியது.
பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில் மின் விநியோகம் தடைபட்டு ஏராளமான கிராமங்கள் இருளில் மூழ்கின. மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்ததில் போக்குவரத்தும் முடங்கியது. புயல் கரையைக் கடந்த பிறகும் இடைவிடாது பலத்த மழை பெய்ததால் திண்டிவனம், மரக்காணம், மயிலம், செஞ்சி ஆகிய பகுதிகள் முழுவதுமாக வெள்ளத்தில் தத்தளித்தன. ஏரி, குளங்கள், அணைகள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் ஏராளமான கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது.
ஆயிரக்கணக்கான வீடுகள், விளைநிலங்கள் பெருவெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளானதுடன், நெடுஞ்சாலைகள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு பகுதிகள் தனித்தீவுகளாக காட்சியளித்தன.
மற்றொருபுறம் ஃபெஞ்சல் புயலின் கோரத் தாண்டவத்தால் கடலூர் மாவட்டமும் சின்னாபின்னமானது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், பெரும்பாலான இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கியது.
இடைவிடாது பெய்த மழையால் அணைகள் நிரம்பி வழிந்தன. நீர்நிலைகள் அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து வெளியேறியதால் வீடுகள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் என அனைத்தும் மூழ்கடிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்தனர். ஏராளமான கால்நடைகளின் உயிர்களும் பறிபோனது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள மகாதீப மலையில் மண் சரிவு ஏற்பட்டது. மலையடிவார பகுதியான வ.உ.சி நகரில் பாறைகள் உருண்டு குடியிருப்புகள் மீது விழுந்ததில் இரு வீடுகள் மண்ணில் புதையுண்டன. வீடுகளுக்குள் இருந்த 7 பேரின் நிலை என்ன ஆனது என்பது தெரியாமல் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணியில் களமிறங்கினர். சுமார் 20 மணி நேர மீட்புப் பணிக்கு பிறகு 7 பேரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். உருக்குலைந்த நிலையில் இருந்த சிறுவர், சிறுமிகளின் உடல்களைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.
மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தால், 7 உயிர்கள் பலியாகி இருக்குமா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள வேங்கிக்கால் ஏரி முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் வேலூர் சாலையில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பலத்த மழையால் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் 22 கிராமங்கள் தனித்தீவாக மாறின. சேலம் – ஏற்காடு மலைப் பாதையில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
நிலைமை இப்படி இருக்க முதலமைச்சர் ஸ்டாலின், ஃபெஞ்சல் புயலால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறி, மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்தார்.
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள் கணக்கிட முடியாத பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், முதலமைச்சரின் இந்த பதில் தமிழக மக்களின் மனதில் இடியாக இறங்கி ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.