மூன்று போர்க் கப்பல்களை கடற்படையில் அர்ப்பணித்ததன் மூலம் இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று போர்க் கப்பல்களை கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு கடற்படை வீரர்கள் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து போர்க் கப்பல்களில் தேசிய கொடியேற்றப்பட்டன. அப்போது பிரதமர் மோடி உள்பட அனைவரும் சல்யூட் அடித்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மூன்று கப்பல்களும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவது பெருமையளிப்பதாகவும், உலக அளவில் கடல்சார் சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் சூளுரைத்தார்.
பின்னர், ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று போர்க் கப்பல்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து பதிவேட்டில் கையொப்பமிட்டார். நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.