சென்னை அடுத்த கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த வடமாநிலப் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திட்டம் தீட்டி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரும் கை காலில் மாவுக்கட்டுடன் வலம் வந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை அடுத்த கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த வட மாநிலப் பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கபட்ட சம்பவம் மாநிலம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரத்தில் தனியாக நின்ற இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவத்தின் பின்னணி விவரங்கள் வெளியாகி கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் வெங்கட் என்பவரின் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டிவரும் முத்தமிழ்செல்வனும், அதே பகுதியில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய தயாளன் என்பவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுப்பதே இவர்களின் பிரதான தொழிலாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் மாதவரம் பேருந்துக்காக காத்திருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அவ்வழியாக வந்த ஆட்டோவை மறித்து மாதவரத்திற்கு எவ்வளவு என கேட்டுள்ளார்.
ஆயிரத்து இருநூறு ரூபாய் ஆகும் என ஆட்டோ ஓட்டுநர் கூறுவதை கேட்ட அந்த இளம்பெண் வேண்டாம் என சொல்லியுள்ளார். இந்த சம்பவத்தை கவனித்த ராயப்பேட்டையைச் சேர்ந்த கயவர்களான முத்தமிழ்செல்வனும், தயாளனும் அந்த பெண்ணை எப்படியாவது கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளனர்.
அதன்படி அந்த இளம்பெண்ணிடம் ஆட்டோவைச் ஓட்டிச் சென்ற முத்தமிழ்செல்வன், 600 ரூபாய் இருந்தால் மாதவரத்தில் இறக்கிவிடுகிறேன் எனக்கூற, அப்பெண்ணோ 400 ரூபாய் மட்டுமே தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். 400 ரூபாய் போதும் என அப்பெண்ணை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆட்டோவை மறித்த தயாளன், தானும் மாதவரம் செல்வதாக கூறி ஆட்டோவில் ஏறியுள்ளார்.
ஆட்டோ வண்டலூர் புறவழிச்சாலை மேம்பாலம் ஏறும் போது நள்ளிரவு நேரம் என்பதாலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதாலும் ஆட்டோவில் ஏறிய வடமாநில இளம்பெண்ணை தயாளன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
தன்னால் முடிந்த அளவு தடுத்துப் பார்த்த அப்பெண், ஒரு கட்டத்திற்கு மேலாக கூச்சலிட்டு உதவி கோரியுள்ளார். இளம்பெண்ணின் கதறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் காவலர்களும் ஆட்டோவை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனை கண்ட தயாளனமும், முத்தமிழ்செல்வனும் கத்தியைக் காட்டி மிரட்டி நெற்குன்றம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அப்பெண்ணை அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இருவரும் மது அருந்தியிருந்ததால் காவல்துறையின் வாகன சோதனையில் மாட்டிக் கொள்வோம் என கருதிய முத்தமிழ்செல்வனும், தயாளனும், வடமாநில இளம்பெண்ணை நெற்குன்றம் அருகே வேறு ஆட்டோவில் ஏற்றிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து விசாரித்த போலீஸார், சம்பவத்தில் தொடர்புடைய முத்தமிழ்செல்வனையும், தயாளனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது தப்பியோட முயன்ற தயாளனுக்கு வலது கை மற்றும் இடது காலில் முறிவு ஏற்பட்டதால் கட்டுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதிகளின் உத்தரவின்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.