பொய்களை மட்டுமே பேசி தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது திமுக என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
அந்தர் பல்டி என்பது இதுதானோ? திமுக சார்பில் நேற்றைய தினம் ஒரு செய்தி ஊடகங்கள் முலமாக வெளியிடப்பட்டது. அதாவது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் என்று…
ஏற்கனவே தமிழகத்தில் திமுக மற்றும் அவர்களுடைய கூட்டணி கட்சியினர் நடத்தி வரும் மும்மொழி கல்வி போதிக்கும் CBSE பள்ளிகளின் பட்டியலை நாம் ஏற்கனவே இரண்டு முறை வெளியிட்டிருந்தோம் அதை மீண்டும் நேற்றைய தினம் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு திமுகவின் மொழி அரசியல் நாடகத்தை அம்பலப்படுத்தினர்.
மேலும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் மகன் நான் பிரெஞ்ச் மொழி கல்வி கற்கிறேன் என தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக வெளியாகி திமுகவின் சாயம் வெளுத்தது என தெரிவித்துள்ளார்.
மேலும் உருது மொழிக்கு ஆதரவாக கடந்த காலங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஆதரவு வாக்குறுதி செய்தியை நாம் பதிவு செய்தோம், பலரும் அந்த செய்தியை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து தமிழக மக்களுக்கு திமுகவின் மொழி நாடக அரசியலை நினைவுபடுத்தினர்.
மேலும் சத்தமே இல்லாமல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்ச் மொழி கற்பிக்க அந்நாட்டு அரசின் தூதரக பிரதிநிதிகளுடன் கடந்த ஆண்டு சென்னை மாநகர மேயர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட செய்தி பத்திரிக்கை ஒன்றில் 28.08.2024 அன்று வெளியாகி இருந்ததையும் வெளியிட்டிருந்தோம் என தெரிவித்துள்ளார்.
திமுகவினர் ஹிந்தி மொழிக்கு எதிராகவோ அல்லது மும்மொழி கொள்கைக்கு எதிராகவோ போராடுவதாக இருந்தால் அதை வேளச்சேரி சன்ஷைன் மான்டசோரி பள்ளியில் தொடங்கி தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நடத்தி CBSE பள்ளிகள் முன்பு தான் நடத்த வேண்டுமென நாம் ஏற்கனவே பலமுறை கூறி இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
அதன் விளைவாக நேற்று மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் என செய்தி வெளியிட்டிருந்த திமுக திடீரென அந்தர்பல்டி அடித்து… கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் என்று இன்று காலை செய்தி வெளியிட்டுள்ளது.
இதிலிருந்தே திமுகவின் தகிடு தத்தங்களை, பொய் பித்தலாட்டங்களை தமிழக மக்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு கல்விக்கான நிதியை மறுக்கிறது என்கிற திமுகவின் குற்றச்சாட்டு பொய்யானது என எச். ராஜா தெரிவித்துள்ளார்.
PM SHRI எனப்படும் Pradhan Mantri Schools For Rising India திட்டத்தில் மும்மொழி கல்வி பயிற்றுவிப்பதற்கான மூன்றாவது மொழிக்கான பாடத்திட்டம் உருவாக்குதல், அதற்கான புத்தகங்கள் அச்சிடுதல், அதற்கான ஆசியர்களை நியமித்தல். (அதில் 30℅ பேர் பெண் ஆசிரியர்கள்) அவர்களுக்கு ஊதியம் வழங்குதல், பள்ளிகளில் ஆராய்ச்சி மையம் உருவாக்குதல், இணையதள உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், விளையாட்டு மையம், சுத்தரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் வழங்குதல், ஸ்மார்ட் வகுப்பறைகள் என உள்ளிட்ட அதிநவீன உள்கட்டமைப்பு விஷயங்களுக்காக வழங்கும் நிதியை மேற்குறிப்பிட்ட எந்த விஷயங்களையும் தமிழக அரசு இதுவரை செய்யாத போது அதற்கான நிதியை மட்டும் கோரும் நிலையில் விதிமுறைகளை மீறி எப்படி நிதி வழங்க முடியும் என்று தான் மத்திய அரசு கேள்வி எழுப்புகிறது.
மேலும் PM SHRI திட்டத்தில் தமிழக அரசு சேருவதற்கான இசைவு தெரிவித்து அதற்கான உள்கட்டமைப்பு விஷயங்களை செய்வதற்கு முன்றாவது மற்றும் நான்காவது தவணை நிதியை ஒதுக்கீடு செய்யக் கோரி தமிழக அரசின் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்த திரு.ஷிவதாஸ் மீனா IAS அவர்கள் மத்திய அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் IAS அவர்களுக்கு 15.03.2024 தேதியிட்டு எழுதியுள்ள கடிதம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியானதை அனைவரும் பார்த்திருப்போம்.
அப்படி எனில் ஏற்கனவே இரண்டு தவணைகளாக PM SHRI திட்டத்திற்கான நிதியை தமிழக அரசு பெற்றது உறுதியாகிறது. மேலும் அந்த நிதியை நேர்மையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு கல்வி வளர்ச்சிக்காக, மாணவர்கள் நலனுக்காக பயன்படுத்தாத காரணத்தாலும் அந்த திட்டத்தை இதுவரை செயல்படுத்தாத காரணத்தாலும் தான் நிதி மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்களை மட்டுமே பேசி மக்களை ஏமாற்றி தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கும் ஆபத்தான அரசியல் கட்சி தானே திமுக என எச். ராஜா விமர்சித்துள்ளார்.