புதுப்பிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கட்டிடத்தின் பிரமாண்டத்தை போல் சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கான புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், பயன்பாட்டிற்கு வந்தது. கேசவ் குஞ்ச் என்று அழைக்கப்படும் இக்கட்டிடம் 3.75 ஏக்கரில் 12 மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 300 அறைகள் கொண்ட இந்த அலுவலகமானது ஆர்.எஸ்.எஸ்.நிகழ்ச்சிகள் நடத்தவும், அமைப்பின் தொண்டர்கள் தங்கவும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்த அலுவலகத்தில் காணப்படும் பிரம்மாண்டம், சங்கத்தின் பணியின் மகத்துவத்தை பிரதிபலிக்க வேண்டும் என கூறினார். நாம் தொடர்ந்து, திசை மாறாமல் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
நாட்டில் சங்கப் பணிகள் வேகம் பெற்று விரிவடைந்து வருகின்றன. இன்று, இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தின் பிரமாண்டத்தைப் போலவே சங்கப் பணிகளையும் பிரமாண்டமாக மாற்ற வேண்டும். நமது பணி அதைப் பிரதிபலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்தப் பணி உலகம் முழுவதையும் சென்றடையும் என்றும், இந்தியாவை விஸ்வ குருவாக (உலகத் தலைவராக) மாற்றும் என்றும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார். சங்கத்தின் தன்னார்வலர்கள் இதற்காக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கான பணிகளை தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் என்றும் மோகன் பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, இணைப் பொதுச் செயலாளர்கள் கிருஷ்ண கோபால், அருண் குமார் மற்றும் அலோக் குமார் மற்றும் பிற மூத்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.