அரசியல் களமாக இருந்தாலும், சமூக வலைத்தளமாக இருந்தாலும், திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பூசலில் சிக்கித் தவிக்கும் நிலையில் திமுகவை நேர் எதிரில் நின்று எதிர்க்கும் பாஜக குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
தமிழகத்தில் அரை நூற்றாண்டாக திமுக வெர்சஸ் அதிமுக என்ற அரசியல் களம், அண்மைக்காலமாக பாஜக வெர்சஸ் திமுக என மாறி வருகிறது. திமுக ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டுவதில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னேறி வருகிறது.
மின்சாரத்துறையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதில் ஏற்பட்டிருக்கும் குளறுபடி, அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்கும் அரசுப்பள்ளிகள், பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு என தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவர் மீதான முறைகேடு புகார்கள் ஒவ்வொன்றாக அண்மைக்காலமாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 99 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொள்கிறார். ஆனால் அதில் பாதியளவு கூட நிறைவேற்றப்படவில்லை என்பதை ஆதாரத்துடன் தமிழக பாஜகவும் அதன் தலைவர் அண்ணாமலையும் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
தம் மீதான ஊழல் மற்றும் முறைகேடுகள் புகார்களுக்கு அமைச்சர்கள் மறுப்பு தெரிவிப்பதும், அதனை ஆதாரத்துடன் அண்ணாமலை நிரூபிப்பதுமே தொடர்கதையாகி வருகிறது.
மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என தமிழக அரசு பிடிவாதம் பிடிப்பதும், மற்ற மாநிலங்கள் அனைத்தும் மும்மொழிக் கொள்கையை ஏற்கும் போது தமிழகம் மட்டும் அடம்பிடிப்பது ஏன் ? என பாஜகவும் மாறி மாறி கேள்விகளை எழுப்பி வருகின்றன.
இதற்கிடையே மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களே சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தி வருவதும் தமிழக அரசியல் களம் பாஜக வெர்சஸ் திமுக என சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குள் நிலவும் உட்கட்சி பூசல்களை சமாளிப்பதிலேயே முழு நேரமும் கடந்து விடுவதால் அரசியல் களத்தில் இருந்து அக்கட்சி படிப்படியாக சரிவை சந்தித்து கொண்டிருக்கிறது.
தமிழக வெற்றிக்கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் பனையூர் இல்லத்தை விட்டு வெளியே வருவதே இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. எனவே தான் தற்போதைய அரசியல் களம் பாஜக வெர்சஸ் திமுக என்ற கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 12 தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதும் அதனை உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் இருக்கும் தேசியக் கட்சிகள் தொடங்கி மாநிலக் கட்சிகள் வரை அனைத்து கட்சிகளும் தங்களின் பணியை தொடங்கிவிட்டன. தமிழகத்தில் நாள்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் திமுக அரசு மீதான அதிருப்தியை மக்கள் மனதில் அதிகரிக்கச் செய்திருக்கிறது.
திமுக அரசின் ஊழல்களையும், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டி அரசியல் செய்ய வேண்டிய அதிமுக உட்கட்சி பிரச்னையில் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
திமுகவுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய இடத்தில் பாஜக மட்டுமே இருப்பதை தமிழகத்தில் அண்மைக்காலமாக அரங்கேறும் நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பட்ஜெட் விளக்கக் கூட்டத்தை நடத்தி, மத்திய பட்ஜெட்டால் தமிழகத்திற்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்ன என்பதை பட்டியலிட்டு பேசி பாஜக தலைவர்கள் திமுகவுக்கு பதிலடி கொடுத்தனர்.
அண்மையில் கூட GET OUT MODI என்ற திமுகவின் சமூக வலைத்தள பிரச்சாரத்திற்கு எதிராக GET OUT STALIN என்ற பாஜக முன்னேடுத்த பிரச்சாரம் டுவிட்டரில் NO 1 TRENDING ஆனது. இதன் மூலம் அரசியல் களமாக இருந்தாலும் சரி, சமூக வலைத்தளமாக இருந்தாலும் சரி தமிழகத்தை ஆட்சி செய்துவரும் திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பது நிரூபணமாகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.