மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பழங்கரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,
மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்க போவதில்லை என்றும் இது குறித்து முதலமைச்சருக்கு பதில் அனுப்பியுள்ளோம் என தெரிவித்தார்.
தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையை தொடங்கியது முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்றும் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூட்டத்தை நடத்தப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளோம்.
மார்ச் 5-ல் பாஜக சார்பில் 3 மொழி படிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கி, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவரிடம் சமர்ப்பிப்போம் என கூறினார்.
மக்களை குழப்புவதே திமுகவின் நோக்கம் என்றும் சீமான் விவகாரத்தில் காவல்துறை வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தமிழக காவல்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறதோ என எண்ண தோன்றுகிறது. வீட்டில் உள்ளவர்களிடம் சம்மன் கொடுப்பது தான் நடைமுறை, சீமான் வீட்டு வாசலில் சம்மன் ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை, தேடப்படும் குற்றவாளிகளுக்கு மட்டும்தான் வீட்டு வாசலில் சம்மன் ஒட்டுவார்கள் என அண்ணாமலை கூறினார்.
முதலமைச்சரின் பிறந்தநாள் விழா மேடையில் கட்சி தலைவர்கள் யாரும் ஆக்கப்பூர்வமாக பேசவில்லை என தெரிவித்தார்.
இந்திய அரசியலில் அநாகரீகமாக பேசக் கூடியவர் உதயநிதி என்றும் அரசியலில் சில தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்பதற்கு, வைகோ தான் எடுத்துக்காட்டு என அண்ணாமலை தெரிவித்தார்.
வைகோ கண் முன்பே 2026-ல் திமுக ஆட்சி காணாமல் போகும் என்றும் இன்னும் 8 மாதத்தில் கூட்டணி இல்லாமல் தமிழக முதலமைச்சர் தனியாக நிற்பார் என அண்ணாமலை கூறினார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் ஆணவத்தின் உச்சத்தில் உள்ளனர் என்றும் ரவுடி கட்சிக்கு திமுக தான் உதாரணம் என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.