ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஊட்டி, கொடைக்கானலில் பிளாஸ்டிக் கொண்டு செல்வதை கண்காணிக்க சுய உதவிக் குழுவினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கிக் கொண்டிருந்தார்.
குறுக்கிட்ட நீதிபதிகள், விடுமுறை நாட்களில் 5 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சாதாரண நாட்களில் 3 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும் வருகை தருவதாகக் குறிப்பிட்டனர்.
மலை அடிவாரத்தில் சுற்றுலா வாகனங்களை நிறுத்தி, பயணிகளை மின்சார பேருந்து அல்லது கண்ணாடி பேருந்துகளில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு அனுமதிக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு செய்வதனால் தேவையில்லாத விபத்துகள் தவிர்க்கப்படும் எனக் கூறிய நீதிபதிகள், இது தொடர்பான விவரங்களை கேட்டு தெரிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டதோடு விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.