பிரதமர் மோடி தொடர்பாக இணைதளம் வெளியிட்ட கேலி சித்திரத்தை நீக்க வேண்டும் என விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி சந்திப்புக்கு முன் விகடன் குழுமம் தனது இணைதள பக்கத்தில் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டது.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் கடந்த 15ஆம் தேதி விகடன் இணையதளத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை முடக்கியது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் குழுமம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில், நட்பு நாடுகளில் உறவில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் விகடன் கேலி சித்திரம் வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டது. விகடன் குழுமம் தரப்பில், கேலி சித்திரத்திரம் வெளியிட்டதற்காக ஒட்டு மொத்த இணையதளத்தையும் முடக்க அவசியமில்லை என வாதிடப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதி, விகடன் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பிரதமர் தொடர்பான கேலிச் சித்திரத்தை நீக்க வேண்டும் என விகடன் குழுமத்திற்கு உத்தரவிட்டார்.
மேலும், கேலி சித்திரத்தை நீக்கியது குறித்து மத்திய அரசுக்கு விகடன் குழுமம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் இணைதள முடக்கத்தை மத்திய அரசு நீக்க வேண்டும் எனவும் ஆணையிட்டார்.