தமிழக அரசின் பட்ஜெட் வெற்று காகிதம் போல் உள்ளதாகவும், வரலாறு காணாத கடனை தமிழக அரசு வாங்கியுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரூ.10 லட்சம் கோடி கடனை நெருங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், டாஸ்மாக் வருமானம் சுமார் 50 ஆயிரம் கோடி இருந்தும் தமிழ்நாடு அரசு கடன் வாங்கியுள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.
தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளுக்கு வட்டி மட்டும் கட்டும் என்றும். பிற மாநிலங்கள் முன்னேறிச் செல்லும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் வரை பாஜகவின் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 40% மதுபானம் கணக்கில் காட்டப்படாமல் விற்பனை செய்யப்படுவதாகவும், டாஸ்மாக் கடைகளில் ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுபானம் தயாரிப்பில் மூலப் பொருட்களுக்கு கூடுதல் விலை என போலி கணக்கு காட்டுகின்றனர் என்றும், டெல்லி, சத்தீஸ்கரில் நடந்த மதுபான முறைகேட்டை விட தமிழகத்தில் அதிகளவு முறைகேடு நடைபெற்றுள்ளதாக சாடினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய ED நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், “செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் வரை பாஜக போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
மேகதாதுவில் அணை கட்டுவோம் எனக் கூறும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை தமிழகத்திற்குள் நுழைய விடலாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்திற்கு டி.கே.சிவக்குமார் வந்தால் பாஜக சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்றும், தமிழக விவசாயிகளை பாதிக்கும் மேகதாது அணை திட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றும், மிழகத்தின் விவசாயம் மற்றும் நீராதார உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுப்பதாகவும் அண்ணாமலை சாடினார்.