சேலம் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் குமுறுகின்றனர். இந்த நிலையில் நாத்திகம் பேசும் திமுகவை சேர்ந்த மேயர் வாஸ்து முறையை கையில் எடுத்திருப்பது அக்கட்சியின் கவுன்சிலர்கள் மத்தியில்கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் நடக்கிறது சேலம் மாநகராட்சியில்… பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.
சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் கழிவு நீர் கால்வாய் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாகச் செய்து கொடுக்கப்படாத நிலையில் மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில்தான் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மற்றொரு களேபரம் அரங்கேறியுள்ளது.
கடந்த மாதம் நடந்த மாநகராட்சியின் இயல்பு கூட்டத்தில் திமுகவின் மூத்த உறுப்பினர்களும் கவுன்சிலர்களுமான குணசேகரன், ஜெயக்குமார் உட்படப் பலர் கடும் அதிருப்தியில் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.
இந்த தகவல் திமுகவின் தலைமைக்குச் சென்ற நிலையில் சேலம் வந்திருந்த முதல்வர் ஸ்டாலின் மேயர் ராமச்சந்திரன், அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோரை கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இப்படியாகச் சேலம் மாநகராட்சி தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கும் நிலையில் வாஸ்து முறைப்படி மேயர் ராமச்சந்திரன் தனது அறையை மாற்றும் முயற்சியை அரங்கேற்றத் துவங்கியுள்ளார்.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி மைய அலுவலகம் கட்டப்பட்டுக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த அலுவலகத்தின் கூட்ட அரங்கின் வலது பக்கத்தில் திமுகவைச் சேர்ந்த மேயர் ராமச்சந்திரனுக்கும், அதன் எதிரில் காங்கிரசைச் சேர்ந்த துணை மேயர் சாரதா தேவிக்கும் தனித்தனி அறைகள் உள்ளன.
தற்போது செயல்பட்டு வரும் அறையை காலி செய்துவிட்டு வாஸ்து முறைப்படி வேறு அறைக்கு மாற மேயர் ராமச்சந்திரன் முடிவு செய்துள்ளார். மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு இடது புறத்தில் உள்ள பொதுப்பிரிவு அலுவலகத்தை காலி செய்துவிட்டு அதில் மேயர் அறையை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதற்காக பொது பிரிவின் இரண்டு சுவர்கள் கிரில் மெஷின் கொண்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த பீரோ, சேர்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. மேலும் மாநகராட்சி ஊழியர்களுக்குக் குறுகலான ஒரு அறை வழங்கப்பட அவர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
சேலம் மாநகராட்சி நிர்வாகம் நிதிப் பற்றாக்குறையின் காரணமாக மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் விழி பிதுங்குவதோடு, ஊழியர்களுக்குச் சம்பளம்கூட கொடுக்க முடியாமல் திணறி வருகிறது.
இந்நிலையில், மேயர் அறையை மாற்றப் பல லட்ச ரூபாய் வீணடிக்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நாத்திகம் பேசும் திமுக-வை சேர்ந்த மேயர் வாஸ்து முறையைக் கையில் எடுத்திருப்பது அக்கட்சியின் கவுன்சிலர்கள் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அடிப்படை வசதிகளை மறந்துவிட்ட மேயர் மீது பொதுமக்களும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.