புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ நடத்திய விசாரணையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் தீனதயாளன் தனது மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக காரைக்காலுக்கு சென்றுள்ளார். அவர் கடற்கரையில் உள்ள விடுதி ஒன்றில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த சிபிஐ அதிகாரிகள் தீனதயாளன் மற்றும் ஒப்பந்ததாரர்களை சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டனர். 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த விசாரணையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் லட்சக்கணக்கான பணம் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து காரைக்கால் மற்றும் புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகம், அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர். மேலும் தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு அதகாரிகள் சீல் வைத்துள்ளனர்.