புதுச்சேரியில் சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் திரும்பப்பெற்றதால் அரசு பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன.
புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர பணியாளர்கள் ஆதரவு தெரிவித்ததால் இரண்டு நாட்களாகப் புதுச்சேரி அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் சாலை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
மேலும், அரசு பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும் எனத் தெரிவித்தனர். அதன்படி, ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியதால் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லக்கூடிய அனைத்து அரசு பேருந்துகளும் வழக்கம்போல் இயங்க தொடங்கின.