தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்று இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதற்காக முன்னாள் தலைவர்கள் கடுமையாக உழைத்ததாக குறிப்பிட்டுள்ளார். தன்னை தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் பாஜகவை பலப்படுத்த தீவிர பணிகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
தம்பி அண்ணாமலை தீவிரமான பணியையும்… அனைத்து தர மக்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடம்.. கட்சியை எடுத்துச் சென்றதில்.. மிக முக்கிய பங்காற்றியதில் மட்டுமல்லாமல்.. பாஜகவை பற்றி பேசாமல் தமிழகத்தில் எந்த நிகழ்வும் நடக்காது என்ற நிலைக்கு கொண்டு வந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன், இரட்டை இலையோடு தாமரை மலரும் என்பதற்கு அடித்தளம் அமைப்பார் என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் கனவை நயினார் நாகேந்திரன் நிறைவேற்றுவார் என்றும் தமிழிசை செளந்தராரஜன் பதிவிட்டுள்ளார்.