டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை என, உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
அமலாக்கத்துறை சோதனையைச் சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது விசாரணைக்கு வந்தபோது, பொய்யான தகவல்களைக் கூறி வழக்கைத் திசை திருப்ப முயற்சி நடைபெறுவதாக அமலாக்கத்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
சோதனையின்போது பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்கவைக்கப்படவில்லை எனவும், டாஸ்மாக் உடைமைகளுக்கு எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை என்றும் அமலாக்கத்துறை விளக்கம் அளித்தது.
எதற்காக வந்திருக்கிறோம் என்ற தகவலை முறையாகத் தெரிவித்த பின்னரே சோதனை தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அமலாக்கத்துறை, சோதனையின்போது யாருடைய அந்தரங்க உரிமையும் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தது.