காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.
பீகார் மாநிலம் மதுபானியில், பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், 13 ஆயிரத்து 480 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களது ஆதரவாளர்களையும் அடையாளம் கண்டு தண்டிப்போம் என தெரிவித்தார். பூமியின் முனை வரை சென்று பயங்கரவாதிகளை துரத்துவோம் எனக்கூறிய அவர், பயங்கரவாதத்தால் இந்தியாவின் உணர்வு ஒருபோதும் உடைக்கப்படாது என குறிப்பிட்டார்.
பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் போகாது என குறிப்பிட்ட பிரதமர் மோடி, நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
கார்கில் முதல் கன்னியாகுமரி வரை மனிதநேயம் மிக்கவர்கள் நம்முடன் இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, தங்களுடன் துணை நின்ற உலக நாடுகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி சூளுரைத்தார்.