சென்னை நடுக்குப்பத்தில் பாஜகவினர் சார்பில் பொது இடத்தில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டதற்கு அனுமதி மறுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
நடுக்குப்பத்தில் உள்ள மீன் மார்க்கெட் அருகே பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 121-வது மனதின் குரல் நிகழ்ச்சியை பொது இடத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலானோர் பங்கேற்கவிருந்தனர்.
இதற்காக 1 வாரத்துக்கு முன்னதாகவே அனுமதி கோரி காவல்துறையிடம் பாஜகவினர் கடிதம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்த போலீசார், அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி ஸ்பீக்கர், மேடை உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினர்.
இதனால் பாஜகவினருக்கும், அங்கு குவிந்திருந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அருகே இருந்த திருமண மண்டபத்தில், பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி பாஜகவினரால் ஒளிபரப்பப்பட்டது.