மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின்போது, அவர் மீது தண்ணீரை விசிறியடித்து குளிர்விப்பதற்காகத் தோல் பைகள் தயாரிக்கும் தொழில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தொகுதியில் நடைபெறும் இந்த தொழிலானது தற்போது நலிவடைந்து வரும் நிலையில் அதனை அரசு காப்பாற்ற வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.
மதுரையில் ஆண்டுதோறும் களைகட்டும் சித்திரைத் திருவிழா தற்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது. முக்கிய நிகழ்வாக மே 12 அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இதனைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். நிகழ்ச்சியில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் தண்ணீரை விசிறியடிப்பது வழக்கம். அதற்காக ஆட்டுத்தோல் பைகள் தயாரிக்கும் பணியில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் மட்டுமே இந்த ஆட்டுத்தோலால் தண்ணீர் விசிறியடிக்கும் பைகள் தயாரிக்கப்பட்டு வருவதால் சித்திரைத் திருவிழா தொடங்கும் மூன்று மாதங்களுக்கு முன்பிலிருந்தே விரதம் இருந்து பைகளைச் செய்வதற்கான பணிகள் தொடங்கிவிடும்.
ஆனால் சில ஆண்டுகளாகத் தண்ணீர் வசதி, இட வசதி உள்ளிட்டவை இல்லாததால் தோல் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் தொட்டிகள் சேதம் அடைந்தும் கருவேலமரங்கள் சூழ்ந்தும் காணப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலையில் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தை நாட வேண்டிய நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு ஆட்டுத் தோலை ரூபாய் 150க்கு வாங்கி பதப்படுத்துவதற்கு மட்டுமே 200 முதல் 250 ரூபாய் செலவழிப்பதாகவும் இதனால் தங்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். தங்கள் பகுதியிலேயே பதப்படுத்துவதற்கு முறையான தண்ணீர் வசதி, தொட்டி வசதி செய்து தந்தால் ஆட்டுத் தோலைப் பதப்படுத்துவதற்கு 50 ரூபாய் மட்டுமே ஆகும் எனவும் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் தொகுதியில் வரும் காரியாபட்டியில் நடைபெறும் ஆட்டுத் தோல் பைகள் தயாரிக்கும் தொழில் நசிந்து வரும் நிலையில் தொழிலாளர்களின் நலனைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
தொழில் சிறக்க மானியத்துடன் கடன் உதவி வழங்க வேண்டும் என்றும் விற்பனை ஆகாத தோல் பைகளைச் சேமிக்க குடோன் வசதிகளைச் செய்து தர வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கும் தொழிலாளர்கள், வேறு தொழில்கள் இருந்தாலும் கள்ளழகர் மீது கொண்ட பற்றுதலாலும் வேண்டுதலாலும் ஆட்டுத் தோல் பைகள் தயாரிப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
கள்ளழகர் திருவிழாவுக்காகக் காலம் தோறும் தோல் பைகள் தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் தற்போது தொழில் நலிவடைந்துள்ளதால் வேதனையடைந்துள்ளனர். வரும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டேனும் தங்கள் துயர் துடைக்க அரசு முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.