ஜம்மு – காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த அணைகளில் நீர்மின் திட்டங்களுக்கான பணிகளை ஆரம்பித்த இந்தியா, வண்டல் மண்ணை அகற்றும் பணியையும் தொடங்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஜம்மு காஷ்மீரில் மினி சுவிட்சர்லாந்து என்று கூறப்படும் பிரபலமான சுற்றுலாத் தலமான பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவம் ஈடுபட்டிருப்பதை உறுதிப் படுத்திய இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக,1960 ஆம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இதனைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் உள்ள ரம்பன் மாவட்டத்தில் செனாப் நதிக்குக் குறுக்கே உள்ள பாக்லிஹார் நீர்மின் அணையின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டன. அதேபோல், ரியாசி மாவட்டத்தில் உள்ள அணையின் மதகுகளும் மூடப்பட்டன. மேலும், வடக்கு காஷ்மீரில் ஜீலம் நதிக்குக் குறுக்கே உள்ள கிஷன்கங்கா அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரும் முழுவதுமாக நிறுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில், சலால், பாக்லிஹார் அணைகளில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதை நாட்டின் மிகப்பெரிய நீர்மின் நிறுவனமான NHPC மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1987 மற்றும் 2008ம் ஆண்டுகளில் இந்த அணைகள் கட்டப்பட்டன. இந்த அணைகளில், தூர்வாரும் பணிகள் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரின் எரிசக்தி உள்கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாக பாக்லிஹார் அணை விளங்குகிறது. இந்த அணையில் இருந்து சுமார் 900 மெகாவாட் மின்சார உற்பத்தி ஆகிறது. அதே போல் சலால் அணை, சுமார் 690 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்டதாகும்.
இந்த அணை கட்டப்பட்டதிலிருந்து வண்டல் மண் அகற்றாத காரணத்தால், கடந்த காலங்களில் இரண்டு அணைகளின் மின் உற்பத்தித் திறன் வெகுவாக குறைந்தது.
மொத்த தண்ணீரையும் கிட்டத்தட்ட காலி செய்தால் மட்டுமே, அணைகளில் உள்ள வண்டல் மண்ணை அகற்றி,அணையைச் சுத்தம் செய்ய முடியும். அதற்காகவே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்தவுடன், உடனடியாக, சலால் மற்றும் பாக்லிஹார் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்த விடப்பட்டதாகவும், அதனால்,செனாப் நதியின் நீர்மட்டம் கூடியதாகவும் கூறப்படுகிறது.
செனாப், ராவி ,பியாஸ் மற்றும் சட்லெஜ் நதிகளே பாகிஸ்தானின் அடிப்படை நீர் ஆதாரமாகும் கிட்டத்தட்ட 68 சதவீத கிராம மக்களின் வாழ்வாதாரமாகவும் லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்களுக்குக் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளன. பாகிஸ்தானின் வேளாண்மை தொழில் குடிநீர் என அனைத்தும் இந்த நதிகளின் தண்ணீரையே நம்பியுள்ளன.
இந்தியா சிந்துநதி நீரை நிறுத்துவதால், பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். வேளாண்மை பாதிக்கப்படுவதால், அதன் தொடர்ச்சியாக, நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு கடும் பஞ்சம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதியின் ஒரு சொட்டு தண்ணீரும் பாகிஸ்தானைச் சென்று அடையாது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உறுதியளித்திருந்தார். அதற்கேற்ப, இந்த நதிகளில், புதிய அணைகளைக் கட்டவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடுதலாக, அணைகளிருந்து நீரை வெளியேற்றக் கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.