மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடிக்கிறது.
அப்பாவி பொதுமக்கள் 26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க முப்படைகள் தயாராகி வரும் சூழலில், நாடு முழுவதும் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, டெல்லியில் உள்துறை அமைச்சக அலுவலகத்தில் பாதுகாப்பு ஒத்திகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்கள், குடிமை பாதுகாப்பு இயக்குநரக தலைவர்கள், தேசிய பேரிடர் மீட்பு ஆணைய அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டனர்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 2வது முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்தும், எல்லையில் நடைபெற்று வரும் முன்னேற்றங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் மற்றும் பாதுகாப்பு செயலாளருடன் பிரதமர் மோடி தனித்தனியாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.